Important Links

More Search Keywords

See it!

Sunday, January 25, 2009

நான் கடவுள் - இசை விமர்சனம்

இளையராஜாவும் பாலாவும் வெற்று ஆர்ப்பாட்டங்களைத் திரையில் காட்டும் கலைஞர்களில்லை. இவர்கள் உலகம் வேறு. அந்த உலகத்துக்கு அவர்கள் நம்மை அழைக்கக் கூட மாட்டார்கள். நல்லது வேண்டுமென்றால் நாமாகத்தான் தேடிப் போக வேண்டும்!

நான் கடவுள் படத்தின் இசையை வெற்று வார்த்தைகளால், ஆஹா ஓஹோ என்று புகழ்வதே கூட ராஜாவை அவமானப்படுத்துவது போலாகிவிடும்.

சரியான வார்த்தைகளில் சொன்னால், ஒரு மனிதனின் வலி, எதையோ தேடி ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனின் பயணம், அவன் இதயம் தேடும் நிம்மதி... இவற்றை சரியாக உணர ஒரு முறை நான் கடவுள் பாடல்களைக் கேளுங்கள்.

நான் கடவுள் பாடல்கள் வணிக ரகமில்லை. உள்குத்து, வெளிக்குத்து என எந்தக் குத்தும் இதில் கிடையாது.

ஆனால் மனதை இளக வைக்கும் ஜீவன் எல்லாப் பாடல்களிலும் அடிநாதமாய் ஓடிக் கொண்டே இருக்கிறது.

அனுபவித்துக் கேட்பவர்களுக்கு ஆனந்தம் ஆயிரம்… ரெடிமேட் இசை விரும்புவோர்க்கும் நிச்சயம் நம்மிடமும் பதில் இல்லை… திரைநாதத்தின் தலைவனாகப் பார்க்கப்படும் ராஜாவிடமும் இல்லை!

ஓம் சிவோஹம்…

பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & குழு

இந்தப் பாடலுக்கு முன் இளையராஜா கொடுத்திருக்கும் அந்த அறிமுக இசை.. கேட்கும் யாரையும் உலுக்கிவிடும். இசையில் காட்ட முடியாத பாவமே இல்லை என்பதை உணர்த்தும் அற்புத பாடல்.

நான் கடவுள் என்பதை உணர்த்தும் இந்த ஓம் சிவோஹம்… பாடல்தான் இந்த தொகுப்பின் ஹைலைட். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டுதான் ஒரு காசி சாமியார் கண்ணீர் விட்டுக் கதறினாராம். இந்த பாடலில் கடவுளைக் கண்டேன் என்று ஆனந்தக் கண்ணீருடன் பாலாவை வாழ்த்தினாராம். அந்த அனுபவத்தை நாங்களும் உணர்ந்தோம் பாலா!

கண்ணில் பார்வை…
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்

கண்ணற்ற ஒரு பெண்ணின் சோகத்தைச் சொல்லும் இந்தப் பாடலின் வரிகள் இதயத்தைத் தொடுகின்றன. ராஜாவின் அந்த ஒற்றை வயலின் சொல்லும் சோகங்கள் ஏராளம்.

மாதா உன் கோயிலில்…
பாடியவர்: மதுமிதா

அச்சாணியில் ராஜா நெகிழ வைத்த அதே பாடல்தான். சில விநாடிகள் மட்டுமே ஒலிக்கிறது. இதன் இன்னொரு வடிவம் சாதனா சர்க்கம் குரலில் தனியாக தரப்பட்டுள்ளது.

அம்மா உன் பிள்ளை நான்…
பாடியவர்: சாதனா சர்க்கம்

ஒரு ரீமிக்ஸ் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நெற்றிப் பொட்டில் அடித்தமாதிரி சொல்லிக் கொடுத்திருக்கிறார் இசைஞானி.

அச்சாணியில் வரும் மாதா உன் கோயிலில் பாடலை, நன்கு மெருகேற்றி ரீமிக்ஸ் செய்திருக்கிறார் ராஜா. கேட்கும்போத, நம்மையும் அறியாமல் கண்கள் கலங்கி, கண்ணீராய் இதயம் வழியும் அற்புதம் இந்தப பாடலுக்கு மட்டும் உண்டு.

பிச்சைப் பாத்திரம்...
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
பாடல்: இளையராஜா

ரமண மாலையில் ராஜாவின் குரலில் ஒலித்த அதே பாடல் இப்போது மது பாலகிருஷ்ணன் குரலில் ஒலிக்கிறது.

ராஜாவின் குரலுக்கு உள்ள மந்திர சக்தியை பாலகிருஷ்ணனின் குரலில் எதிர்பார்க்க முடியாதுதான் என்றாலும் ஒரு பரவசத்தை உணர வைக்கும் பாடல் இது.

ராஜாவே பாடியிருந்தால் நிச்சயம் உங்கள் கண்ணோரங்களில் ஆனந்த மழை பெருகியிருக்கும்.

ஒருகாற்றில்…
பாடியவர்: இளையராஜா

கண்ணில் பார்வை… பாடலின் இன்னொரு வடிவம் இந்தப் பாடல். இளையராஜா பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் சிறப்பே இளையராஜா பாடியிருப்பதுதான்.

நான் கடவுள்... இசையை, அதன் உண்மையான அர்த்தத்தை ரசிகர்களுக்குப் புரிய வைத்திருக்கும் ஆல்பம்.

Thanks: thatstamil.com

No comments:

Labels