Important Links

More Search Keywords

See it!

Thursday, November 27, 2008

Mumbai terrorists attack : latest news

மும்பை: மும்பையில் தாஜ் மகால் ஹோட்டல், கொலாபா, மெட்ரோ சினிமா, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், டிரைடன்ட் ஹோட்டல், காமா மருத்துவமனை, நரிமன் ஹவுஸ், கபே லியோபோல்ட் ஆகிய 10 இடங்களில் தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 101 பேர் கொல்லப்பட்டனர், 288 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பலியானவர்களில் 6 பேர் அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், 16 பேர் போலீசார் ஆவர்

டிரைடண்ட் ஹோட்டலில் (ஓபாராய் ஹோட்டல்) மேலும் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். நரிமன் ஹவுஸ் ஹோட்டலில் அமெரிக்கர்கள் உள்ளிட்ட 20 பேரையும் பிணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.

தாஜ் ஹோட்டலில் பிணயக் கைதிகளைப் பிடித்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு பயணிகள் மீட்கப்பட்டுவிட்டனர். ஆனாலும் அந்த ஹோட்டலின் பல்வேறு மாடிகளில் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ராணுவமும் என்எஸ்ஜி கமாண்டோக்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதே போல ஹோட்டல் டிரைடண்டிலும் நரிமன் ஹோட்டலிலும் ராணுவமும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு தொடங்கிய இந்தத் தாக்குதலாலும் ராணுவம்- கமோண்டாக்களின் பதிலடி தாக்குதலாலும் மும்பை நகரமே பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது.

நேற்று இரவில் தீவிரவாதிகள் இந்த இடங்களில் புகுந்தனர். முதலில் கையெறி குண்டுகளை வீசிவிட்டு பின்னர் தானியங்கி துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய இடம் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையமாகும். இதையடுத்து கபே லியோபோல்ட், காமா மருத்துவமனை ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பின்னர் தாஜ் மகால், நரிமன் ஹவுஸ், டிரைடன்ட் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களுக்குள் புகுந்து அங்கு தங்கியிருந்த பலரையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர்.

இதையடுத்து போலீஸாரும், அதிரடிப்படையினரும் ஹோட்டல்களுக்கு விரைந்தனர். ஆனால், பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையும் தொடங்கியது. இதில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். 7 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாஜ் ஹோட்டலில் 5 தீவிரவாதிகளும் டிரைடண்ட் ஹோட்டலில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாஜ் ஹோட்டலில் பிணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்த சண்டையில் கூடுதல் கமிஷ்னர் அசோக் காம்தே, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

காமா ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின் போது அசோக் காம்தே கொல்லப்பட்டார். மற்ற இருவரும் டிரைடன்ட் ஹோட்டலில் நடந்த நடவடிக்கையின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இதையடுத்து ராணுவமும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. தீவிரவாதிகள் பிடியில் உள்ள வெளிநாட்டினர் உள்ளிட்டோரை மீட்க ஓபராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களை தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 200 பேர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

அதேபோல டிரைடன்ட் மற்றும் நரிமன் ஹவுஸ் ஹோட்டல்களையும் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அங்கு சுமார் 15 முதல் 18 தீவிரவாதிகள் சுமார் 40 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.

அவர்களை மீட்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஆனாலும் இன்றிரவுக்குள் இந்தப் பணி முடியாது என்று மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

3 ஹோட்டல்களிலும் நாளை காலை வரை தாக்குதல் நடக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலையடுத்து நேற்றிரவு முதல் மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போய்விட்டது. இன்று பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.

பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அதே போல பெரும்பாலான ரயில்களும் இயக்கப்படவில்லை. இதனால் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இந் நிலையில் இன்று காலை மகாராஷ்டிர சட்டசபை கட்டடமான விதான் பவனில் ஒரு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தீவிரவாதி கைது:

இதற்கிடையே டிரைடண்ட் ஹோட்டலில் ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டான். இவனது பெயர் அபு இஸ்மாயில். பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச் சேர்ந்தவன் எனத் தெரியவந்துள்ளது.

மரியாட் ஹோட்டலுக்குப் பாதுகாப்பு

மும்பையின் இன்னொரு புகழ் பெற்ற ஹோட்டலான ஜே.எம்.மரியாட் ஹோட்டலை தீவிரவாதிகள் பிடிக்கப் போவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் சிக்கியவர்கள், தப்பியோர் குறித்த விவரம் அறிய, Mumbai Helpline Number: +91-22-2200-5388 Delhi Helpline No: +91-11- 2389-0606 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Labels